Saturday, April 12, 2008

புதுச்சேரிக் கடற்கரைக்குப் போய்வந்தேன்...

புதுச்சேரிக் கடற்கரை புகழ்பெற்றது.பாரதியார்,பாரதிதாசன்,வாணிதாசன் உள்ளிட்ட பாவலர்கள் வழியாக என்றும் உலக மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புதுச்சேரிக் கடற்கரைக்கு இன்று மாலை என் தந்தையார்,அக்கா கானல்வரியுடன் சென்று மகிழ்ந்தேன்.கடல் அலைகளின் அழகு,படகுகளின் அணிவகுப்பு,மக்கள் கடற்காற்று வாங்கும் நோக்கில் அமைதியாகவும்,உடற்பயிற்சி செய்வோர் பரபரப்பாகவும் இயங்கும் இயக்கம் கண்டு மகிழ்ந்தேன்.
சிறுநீரக நோய் உள்ளதால் எந்தப்பண்டமும் வாங்கி உண்ணவில்லை.ஒரு மணிநேர காற்று வாங்கலுக்குப் பிறகு பாரதிப் பூங்கா சென்று என்னையொத்த சிறுவர்களுடன் ஆடி மகிழ்ந்தேன்.உரோமன் உரோலந்து நூலகத்தில் நோட்டமிட்டோம்.பாவலர் சீனு தமிழ்நெஞ்சனைக் கண்டு வணக்கம் சொன்னோம். இரவு வீடு வந்துசேர்ந்தேன்.
புதுச்சேரி வருபவர்கள் கடற்காற்றும்,பாரதிப்பூங்காவும் பார்க்க என்னைப் போன்ற சிறுவர்களுடன் வாருங்கள்.வருகை மகிழ்ச்சியாக இருக்கும்.

Wednesday, April 9, 2008

அடுத்த ஆண்டு பள்ளிக்குப் போகிறேன்...

எங்கள் அப்பா தமிழறிஞர்.என்னைத் தமிழ்வழிப்பள்ளியில் படிக்கவைக்க விரும்புகிறார்.தக்க தமிழ்ப்பள்ளி இல்லாததால் ஆங்கிலவழிப் பள்ளிக்குப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.ஆனால் அப்பா வழியாகத் தமிழில் நன்கு படிப்பேன்.இப்பொழுது திருக்குறள்,ஆத்திசூடி,சில பாடல்கள் நன்கு படிக்கிறேன்.கோடை விடுமுறைக்கு எங்கள் அப்பா ஊரான இடைக்கட்டுக்குச் செல்ல உள்ளோம்.